வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் ; மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் துவக்கினார் எடப்பாடி பழனிசாமி: மேலிடம் மீது விரக்தியால் அண்ணாமலை புறக்கணிப்பு

2 hours ago 1


மேட்டுப்பாளையம்: சட்டசபை தேர்தலையொட்டி மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் துவக்கினார். இதையொட்டி இன்று காலை மேட்டுப்பாளையம் வந்த அவர் வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை புறக்கணித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் இன்று சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். இதற்காக அவர் இன்று காலை 9:45 மணி அளவில் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதையடுத்து விவசாயிகளுடன் சந்திப்பிற்காக தனியார் திருமண மண்டபம் சென்றார்.

அங்கு விவசாயிகளை சந்தித்து பேசினார். இன்று மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து மாலை 5.40 மணிக்கு காரமடை பேருந்து நிறுத்தம் அருகில் பிரசார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடம் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அவருடன் வந்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கெடுபிடி காட்டினர். எடப்பாடி பழனிசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது கோயில் கருவறை மீது ஏறி அதிமுக கேமராமேன் புகைப்படம் எடுத்தார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார்.

அதோடு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிறிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் கரூரைச் சேர்ந்தவரும், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான அண்ணாமலை கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறார். அவர் இன்று சென்னையில் உள்ளார். இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் எனது தனிப்பட்ட விருப்பம். நான் தனிப்பட்ட ஆள். இது குறித்து பேச விரும்பவில்லை. நான் பேசும்போது பேசுகிறேன். யாரிடமும் நான் வேலை பார்க்கவில்லை. தனி மனிதனாக இருக்கிறேன். யாரும் பேசியதற்காக நான் பேசவேண்டியதில்லை’ என்றார். எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சார தொடக்க கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் வீட்டில் இருந்து இன்று காலை 7 மணிக்கு கோவைக்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார். அப்போது, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 11 பேரும், சேலம் மாநகர போலீசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு எஸ்ஐ உள்ளிட்ட 25 போலீசாரும் என 36 பேர் அடங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிஆர்பிஎப் வீரர்கள், துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பை வழங்குகின்றனர். இந்த வீரர்கள், ஆயுதப்பயிற்சியோடு, தற்காப்பு கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர்.

சேலம் வீட்டில் எடப்பாடி பழனிசாமி தங்கியிருக்கும் போது, சிஆர்பிஎப் வீரர்களுடன் சேலம் மாநகர போலீஸ் படையும், சென்னை வீட்டில் தங்கியிருக்கும் போது சிஆர்பிஎப் வீரர்களுடன் சென்னை மாநகர போலீஸ் படையும் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல், தமிழ்நாடு போலீசில் இருந்து பாதுகாப்பில் ஈடுபடும் எஸ்ஐ, ஏட்டு, முதல்நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் என அதற்கான போலீசாருக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் ; மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் துவக்கினார் எடப்பாடி பழனிசாமி: மேலிடம் மீது விரக்தியால் அண்ணாமலை புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article