வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு

1 week ago 3

*விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் அனைத்து வனங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், வனங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் இன்றி குறைந்து வருகிறது. பசும்புற்கள், செடி கொடிகள் காய்ந்த நிலையில், விலங்குகளுக்கு தேவையான உணவு கிடைப்பதில்லை.

தண்ணீரும் கிடைப்பதில்லை. காட்டு யானை, காட்டு மாடுகள் மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் அனைத்தும் தற்போது நாள்தோறும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கிவிட்டன. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கோத்தகிரி போன்ற பகுதிகளில் காட்டு மாடுகள் மக்கள் வாழும் பகுதிக்குள் நாள்தோறும் வர துவங்கிவிட்டன.

இவைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மலை காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதற்கிடையில், பயிர்களை விலங்குகள் சேதப்படுத்தி மேலும் நஷ்டத்தை ஏற்படுத்துவதால் விவசாயிகள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். மேலும், பல இடங்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்து ஊருக்குள் தற்போது காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக வந்துச் செல்கின்றன.

அதேபோல், கரடிகளும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து வீடு, கடை மற்றும் கோயில் போன்றவைகளின் கதவை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிச் செல்கின்றன.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது அனைத்து கிராமங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் யானைகள், காட்டு மாடுகள் விவசாய நிலங்களுக்குள், குடியிருப்புக்களுக்குள் வர விடாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குரங்குகளை பிடித்து அடர்ந்த காடுகளில் கொண்டுச் சென்றுவிட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article