புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் ஒரு மாதம் பெய்யக்கூடிய பருவ மழை முழுவதும் ஒரே நாளில் பெய்து பொதுமக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது. இதேபோல், கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அக்னி வெயில் காலத்தில் அனல் காற்று, வறட்சி, தோல் வியாதி, நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஏற்கனவே உடல் நிலையில் பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
தமிழகத்தில் கோடை வெயில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற 4 மாதங்களில் மிக அதிக அளவில் இருக்கும். இந்த காலத்தில் ஒரு சில நேரங்களில் கோடை மழை வந்து சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அப்படி பெரியதாக கோடை மழை வந்ததாக தெரியவில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் மீண்டும் வெயில் சதம் அடிக்க தொடங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தாண்டு கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், பொதுமக்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், வாழ்வாதாரத்தை நோக்கி ஓடக்கூடிய பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் அந்த நேரத்திலும் உழைக்க வேண்டி உள்ளது.
குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், கனரக வாகனங்களை இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் இந்த வெயில் காலத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கலாம். கோடை வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள இயற்கை பல விஷயங்களை தந்துள்ளது. அதனை தேடிப்பிடித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாக உள்ளது.
அந்த வகையில் கோடை காலத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கொளத்தூரைச் சேர்ந்த பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவர் திவ்யா பிரகாஷ் கூறியதாவது:
பொதுவாக வெயில் காலங்களில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் ஒரு விஷயம் அதிக அளவில் மக்களை பாதிக்கிறது. இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்போது நமது தோல் வறட்சியாக மாறிவிடும். வாய் தண்ணீரில்லாமல் காய்ந்து விடும். மனக்குழப்பம், தலைவலி, அதிகமாக மூச்சு வாங்கும், மயக்கம் போட்டு விழ வாய்ப்புள்ளது. மூளைக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் குறைவாகும். கை, கால்கள் இழுத்துக் கொள்ளும்.
உடம்பில் உள்ள நீர் சத்துக்கள் குறைவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. மேலும் வெயில் காலத்தில் அம்மை நோய் வயிற்றுப்போக்கு, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமை போன்ற நோய்களும் அதிக அளவில் வரும் இதனை தவிர்க்க தலை உச்சியில் வெயில் இருக்கும்போது அதாவது 12 மணி முதல் மதியம 3 மணி வரை வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. குறைந்தபட்சம் 10 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே மாதிரி ஆடைகளை பயன்படுத்தும் போது லேசான ஆடைகளை உடல் முழுவதும் மூடியவாறு பயன்படுத்தலாம்.
மேலும் டார்க் கலர் ஆடைகளை தவிர்த்து லைட் கலர் ஆடைகளை பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது கண்ணாடி, தொப்பி, குடை இவற்றை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் உடற்பயிற்சி அதிகமாக வியர்வை சிந்தி வேலை செய்வது, குறிப்பாக சமையலறையில் சமைப்பது இவற்றை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், கார்களில் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு நாய்களை இந்த நேரத்தில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட இந்த நேரத்தில் வாகனங்களை நிறுத்தும்போது வாகனங்கள் மிக எளிதில் சூடாகிவிடும் இதனால் குழந்தைகளுக்கு ஹீட் கிராம்ஸ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதற்கு நாம் குளிப்பது மிகச்சிறந்த வழி. குறிப்பாக காலை, மாலை அல்லது இரவு என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது அதிக வெப்பத்தல் நீங்கள் உடல் உஷ்ணம் அடையும் போது ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி முகம் கை கால் மற்றும் அக்கில்களில் தடவி சிறிய அளவில் தண்ணீர் போட்டு கழுவினால் கூட உடல் உஷ்ணம் ஆவதை தடுக்க முடியும். கோடைகாலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க உணவு நமக்கு அருமருந்தாக உள்ளது. முதலில் கோடை கலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
இதில் முக்கியமானது இளநீர். இது உடலுக்கு மிகவும் நல்லது. இளநீர் உடம்பில் உள்ள உப்பு சத்தை சீராக்குவது அதுமட்டுமில்லாமல் உடலை குளிர்விக்க கூடிய தன்மை உண்டு. உற்சாக பானம் என பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், கிர்ணி பழம் போன்ற பழங்களில் நிறைய விட்டமின் சி உள்ளது. இவை வெயில் காலத்திற்கு மிகவும் உகந்த பழங்கள். வெயில் காலத்தில் வரும் அலர்ஜி, வயிற்றுப்போக்கு இவற்றை இந்த பழங்கள் தடுக்கும். மேலும் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்க செய்யும்.
குறிப்பாக தர்பூசணி வெயிலுக்கு மிக சிறந்த ஒரு பழம். இதில் 90 சதவீத நீர் சத்து உள்ளது. அதேபோல், வெள்ளரிக் காயில் பைபர் சத்து அதிகமாக உள்ளது. வெயில் காலங்களில் நமது உடலில் நீர் சத்து குறைந்து விடுவதால் நிறைய பேருக்கு மலச்சிக்கல் ஏற்படும். அது போன்ற பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல், சமையலில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். வெயில் காலங்களில் ஏற்கனவே அலர்ஜி இருப்பவர்களுக்கு அது மேலும் அதிகரிக்கும். பொதுவாக நாம் குளிர்காலத்தில் தான் சளி பிடிக்கும் என நினைத்திருப்போம். ஆனால் வெயில் காலங்களிலும் சளி பிடிக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் தான் அதிக அளவில் சளி பிடிக்கும். அதேபோல், பெரியவர்களுக்கு வயிற்றுப் போக்கு அதிகமாக இருக்கும். ஏனென்றால் வெயில் காலங்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க சிகப்பு வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
அதேபோல் தயிர் அதிகமாக பயன்படுத்தலாம். தயிரில் ப்ரோ பயோடிக் எனப்படும் சத்து உள்ளது. இது குடல் சார்ந்த பிரச்னைக்கு உதவும். முடிந்தவரை தயிறை வீட்டிலேயே தயாரித்தால் அது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும். அதேபோல் வெயில் காலங்களில் நிறைய வாழைப்பழங்களை சாப்பிடலாம். இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் உள்ளது. வெயில் காலங்களில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் உடலில் உப்புச்சத்து குறைந்து விடுகிறது. இதனை சரி செய்ய வாழைப்பழத்தை சாப்பிடலாம். உப்பு கரைசல் நீர் பயன்படுத்துவதால் உடல் சோர்வை தவிர்க்கலாம். அதேபோல் வெயில் காலங்களில் கீரை வகைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதில் நீர் சத்து அதிகமாக உள்ளது. வெயில் காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட கீரைகளை தொடர்ந்து எடுத்து வரலாம். அசைவ உணவுகளை பொருத்தவரை எளிதாக ஜீரணமாக கூடிய அசைவ உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே வெயில் காலங்களில் அதிக காரம் கலந்த உணவுகள், ஜீரணம் ஆகுவதற்கு கடினமான உணவுகள் மற்றும் அதிக அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை, ஸ்வீட்ஸ், பேக்கரி உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அசைவ உணவை பொறுத்த வரை மீன் வகை உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும் தற்பொழுது ஜி.பி.எஸ் எனப்படும் நோய் தற்போது தொடர்ந்து அச்சுறுத்துவதால் இந்த வெயில் காலத்தில் அதிக அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தியே இந்த கோடை வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் நம்பை பாதுகாக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழங்கள்
கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் தர்பூசணி, கிர்ணிப்பழம், ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, பிளாக்பெரி, ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற பழங்களை சாப்பிடலாம். இதனால், உடல் சூடு தணிக்க முடியும். மேலும், செரிமான பிரச்னை, மலச்சிக்கல் போன்ற பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கற்றாழை
கற்றாழையில் உடலுக்கு தேவையான முக்கியமான 8 அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழையை பயன்படுத்தி முகம், கை, கால்களை கழுவினால் சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்க உதவும். கற்றாழையுடன் கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து பானமாக குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும்.
கீரை வகைகள்
கோடைகாலத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தை தணிக்கலாம். மேலும் ரத்த சோகைக்கு இது பெரிதும் உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க ரத்த அழுத்தத்தை குறைக்க எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் பெற கீரைகள் உதவுகின்றன.
The post வந்தாச்சு சுட்டெரிக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தவிர்ப்பது எப்படி..? மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள் appeared first on Dinakaran.