வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

3 hours ago 2

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை நவம்பர் 28ம் தேதி தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்!

எந்த தொற்றும் பாதிக்காத வகையில் 10 மாதங்கள் மனுதாரர் சிகிச்சை அளித்த நிலையில், வண்டலூர் பூங்காவில் சேர்க்கப்பட்ட 27 நாட்களில் அது இறந்திருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கால்நடை மருத்துவர் வல்லையப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டையில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். ஆனால், குட்டி குரங்கை ஒப்படைக்க மறுத்த நீதிமன்றம், வேண்டுமானால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று குரங்கு குட்டியை பரிசோதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த குட்டி குரங்கு திடீரென உயிரிழந்தது.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி குரங்கு கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி உயிரிழந்தது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என கால்நடை மருத்துவர் வல்லையப்பன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குட்டி குரங்குக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், குட்டி குரங்குக்கு என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும், உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதி ஒத்தி வைத்தார்.

 

The post வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article