மேட்டுப்பாளையம் : ஊட்டி சாலையில், வனப்பகுதிக்குள் வெளியேற்றப்படும் ஓட்டல் கழிவுநீரால் வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது.மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் காணப்படுகின்றன.
இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
இதனிடையே மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையில் சமீப காலமாக சிறிய அளவில் ஹோட்டல்கள் முதல் பெரிய அளவிலான ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் என புதிது புதிதாக கட்டிடங்கள் அதிகளவில் முளைத்து வருகின்றன.
இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் வனப்பகுதியின் ஒரு புறம் இருந்து மற்றொரு புறம் செல்வதற்காக ஊட்டி சாலையை கடக்கும் போது வனவிலங்குகளின் வலசை பாதைகளை மறித்து இந்த புதிய கட்டிடங்கள் உருவாகியுள்ளதால் மாற்றுப்பாதையில் செல்ல முற்படும் போது மனித – வன உயிரின மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இந்த சிறிய அளவிலான ஹோட்டல்கள் முதல் பெரிய அளவிலான ரெஸ்டாரண்டுகள், ரிசார்டுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வனப்பகுதிக்குள் செல்லும் குட்டைகளில் வெளியேற்றப்படுகின்றன.
இவ்வாறு உணவு மற்றும் தண்ணீரை தேடி வரும் வனவிலங்குகள் இந்த குட்டைகளின் ஓரமுள்ள வாய்க்கால்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரை அருந்தி 10க்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளதாகவும், ஏராளமான மான்கள்,காட்டு பன்றிகள் வனப்பகுதிக்குள் சென்று உயிரிழந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், ‘‘வனப்பகுதிக்குள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் கழிவுநீர் செல்வது குறித்தும், வனப்பகுதிக்குள் கழிவுநீர் செல்லாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர், தேசிய நெடுஞ்சாலையின் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார்.
The post வனப்பகுதிக்குள் வெளியேற்றப்படும் கழிவு நீர் வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து appeared first on Dinakaran.