வண்டலூர் உயிரியல் பூங்காவில் உரிமையாளரை பார்க்காத ஏக்கத்தில் உயிரிழந்த குரங்கு குட்டி: தெரு நாய்களால் நேர்ந்த சோகம்

1 month ago 5

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிபட்டு காயமடைந்த குரங்கு குட்டிக்கு கால்நடை மருத்துவர் வல்லயப்பன் தன் கட்டுப்பாட்டில் சிகிச்சை அளித்து வந்தார். 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டனர். அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால் குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குரங்கு குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி கால்நடை மருத்துவர் வல்லயப்பன், தனது மகள் மற்றும் வழக்கறிஞருடன் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை பார்வையிட்டார்.

இந்நிலையில், வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தரப்பில், வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் குரங்கை ஒப்படைக்குமாறு தெரிவித்தும், ஓசூருக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளார். மேலும், தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தை சரிபார்த்தபோது, மனுதாரர் பெயர் நீக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனவே, குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என்று மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர் தரப்பில், குரங்கு குட்டியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அந்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த குரங்கு தன்னை வளர்த்தவரை பார்க்காத ஏக்கத்தில் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த பூங்கா நிர்வாகத்தினர் பூங்காவில் உள்ள மருத்துவமனையில் குரங்கிற்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் உரிமையாளரை பார்க்காத ஏக்கத்தில் உயிரிழந்த குரங்கு குட்டி: தெரு நாய்களால் நேர்ந்த சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article