நாடுகாணி சோதனை சாவடியில் பிளாஸ்டிக் பைகள்பாட்டில்கள் பறிமுதல்

2 hours ago 1

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை, பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், அரை லிட்டர், ஒரு லிட்டர் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான வகைகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், சாலை ஓரங்கள் மற்றும் வெளி இடங்களில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பும், அதனை வனவிலங்குகள் உண்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா வரும் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.பேருந்தில் பயணிப்பவரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தை பறிமுதல் செய்து அதன் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தமிழக எல்லையில் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் அனைத்து அரசு தனியார் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களிலும் வருவாய் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று காலை நாடுகாணி சோதனை சாவடியில் வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் கார் அங்கு நிறுத்தப்படாமல் முன்னோக்கி வேகமாக இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் கூச்சலிடவே அதற்கு அடுத்ததாக அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சோதனை சாவடியில் அந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகன சோதனையின் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post நாடுகாணி சோதனை சாவடியில் பிளாஸ்டிக் பைகள்பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article