
ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வணிகர் சங்கங்கள் மாநாடுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மாலை நடக்கிறது. பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
இதேபோல், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மறைமலைநகரில் இன்று நடக்கிறது. கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
இதேபோல், பல்வேறு வணிகர் சங்கங்கள் சார்பிலும் வணிகர் தின மாநாடுகள் நடக்கின்றன. இதனால், தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.