வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக் டாக்சி மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு

1 month ago 4

சென்னை: வணிக நோக்கத்திற்காக (பைக் டாக்சி) பயன்படுத்தப்படும் இருச்சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெரு நகரங்களில் போக்குவரத்து சிக்கலை தவிர்க்கவும், குறைந்த கட்டணத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் பைக் டாக்சிகள் பயன்படுத்துகின்றன. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் பைக் டாக்சிக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆட்டோவைவிட கட்டணம் குறைவாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பைக் டாக்சியை கைவிட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.

தமிழ்நாடு அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி, பொதுமக்கள் அதிகபட்சம் இரண்டு பேர் இருசக்கர வாகனக்களில் பயணிக்கலாம். அதுவும் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த மோட்டார் வாகன விதிகளின்படி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது போன்ற விதிமீறல்களால் காப்பீடு உள்ளிட்ட பல சட்ட சிக்கல்கள் ஏற்படும் என போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டுள்ளார். வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது: ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பைக் டாக்சி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம். காப்பீடு இல்லாமல் பைக் டாக்சிகள் இயங்குவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பைக் டாக்சியில் பயணிப்போர் இறந்தால் காப்பீடு வழங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி இன்சூரன்ஸ் போடப்பட்டிருக்க வேண்டும்.

பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். பைக் டாக்சிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்பு அபராதம், வானகங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆட்டோ ஓட்டுநர்கள் – பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக் டாக்சி மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article