சென்னை,
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பல சினிமா நட்சத்திரங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இவரை தவிர்த்து படத்தில் அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டது.
இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அருண் விஜய் இயக்குநர் பாலாவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என்னுடைய இயக்குநர் பாலாவிற்கு மனமார்ந்த நன்றிகள். கோட்டியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இந்தப் படத்தில் பேசாமலேயே மக்களின் இதயங்களை வென்றதற்கு நீங்கள்தான் காரணம். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தினீர்கள். இதற்காக நான் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். என் மனமார்ந்த நன்றி" என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்.