ஈரோடு:
கோவை ஈஷாவில் 31-வது மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த யாத்திரையானது பொங்கல் தினமான14-ம் தேதி ஈரோட்டிற்கு வருகை தந்தது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய ரதத்திற்கு பொதுமக்களும் பக்தர்களும் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
ஈரோடு நகரில் நால்ரோடு, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆதியோகியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மாலையில் செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏ.ஆர்.ஆர் மண்டபம் முன்பாக பழனி பாத யாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதியோகிக்கு ஆரத்தி காட்டியும், மலர்களை அர்ப்பணித்தும் பக்தியுடன் வழிபட்டனர்.
2-ம் நாளான நேற்று கஸ்பாபேட்டையில் உள்ள சத்தீஸ்வரர் கோவில் முன்பாக ஆதியோகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் 1,008 தீபங்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்தனர். இன்றும் ஈரோட்டில் ஆதியோகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இம்மாத இறுதியில் ஈரோட்டின் புறநகர் பகுதிகளுக்கு ஆதியோகி ரதம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.