வணக்கம் நலந்தானே! ஊர் கூடி தேர் இழுப்போம்!

1 week ago 2

 

சமீப காலங்களில் இளைஞர்கள் உட்பட எல்லோருமே போர் அடிக்குது… போர் அடிக்குது… என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். கையில் இருக்கும் செல்போன் அலுத்துப்போய், பார்த்ததையே பார்த்துக் கொண்டும், மீண்டும் மீண்டும் ஒரே வேலையை மூளைக்கு கொடுக்கும்போது அது சலிப்பு அடைகின்றது. அதிலும் கோடைகாலத் தொடக்கங்களில் கொஞ்சம் உடல் அசதியும் சேர்ந்து விடும். இந்த சலிப்பையும், உடல் அசதியையும் போக்குவதற்கே நிறைய திருவிழாக்களை இந்த மாதத்தில் வைத்துள்ளனர்.

திருவாரூர் தேர், பங்குனி உத்திரத்தின் பொருட்டு முருகன் கோயில்களிலும் உற்சவங்கள், ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு வைணவ கோயில்களில் விசேஷ அர்ச்சனைகள், திருமஞ்சனங்கள் என்று இந்த மாதம் முழுவதுமே நிறைய கொண்டாட்டங்கள்தான். இந்த கோயில் உற்சவங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட நம்முடைய சலிப்புணர்வை மெதுவாக களைய உதவும்.

ஏனெனில், கோயில்களில் நடக்கும் திருவிழா என்பது நம்மை மெதுவாக அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுவிடுக்கும். மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்து கொண்டிருந்த நம்மை திருவிழாக்கள் உற்சாகம் கொள்ள வைக்கும். எனவே, இம்மாதிரி திருவிழாக்களில் கலந்து கொள்ளுங்கள். ஆனால், கூட்ட நெரிசலற்று ஓர் இடத்தில் நின்று கொள்ளுங்கள். அந்த தெய்வத் திருவுருவங்களை தரிசியுங்கள். அந்த மக்கள் வெள்ளத்திலுள்ள மக்களின் அந்த ஒட்டுமொத்த உணர்வெழுச்சியையும் கவனியுங்கள்.

ஒன்றே ஒன்று உங்களுக்கு புரியும்?

அதென்னவெனில், இந்த மக்களெல்லாம் தேடுவது என்ன? ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளையும், ஆசைகளையும் சுமந்து கொண்டு வந்து நிற்கிறார்கள். தன்னை விட பெரும் சக்தியை நோக்கி பக்தியோடும் ஏக்கத்தோடும் நிற்பதை பாருங்கள்.நம்முடைய மனதிற்கு பதில் தெரியாத பல கேள்விகளுக்கு அங்கு அந்த கூட்டமே பதில் சொல்லும். நம்மை மீறிய சக்தி ஒன்று நிலை கொண்டிருப்பதை கவனிக்கலாம். உலகம் எத்தனை பிரமாண்டமானது என்பதும் புரியும். உலகம் என்பது நாம் மட்டுமல்ல. நம்முடைய குடும்பம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த மக்களும்தான் என்பது புரியும். ஏதோ ஒரு வகையில் நம்மைப் போல்தான் அவர்களும் என்று தெரிய வரும்.

இதற்குப் பிறகு அந்த தெய்வ மூர்த்தங்களின் அழகை அறியத் தொடங்குவோம். அங்கு உற்சவ மூர்த்திகளாக வரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார்களின் சேவையை
எண்ணத் தொடங்குவோம். பிறகு, அந்தக் கோயிலின் தொன்மத்தையும் வரலாற்றையும் ஆராயத் தொடங்குவோம். அந்தக் கோயிலின் பின்னால் உள்ள தத்துவத்தை மனம் ஆராயத் தொடங்கும்.

இப்படியே மெதுவாக திருவிழா, பக்தி, ஞானம் என்று படிப்படியாக ஏறத் தொடங்குவோம். அதற்குப் பிறகு இத்தனை திருவிழாவிற்கும் பின்னாலுள்ள ஞானத் திறவுகோலை அறிய முயற்சிப்போம். அதனாலேயே, கோயில்களும் திருவிழாக்களும் மிகப் பெரிய சமூக மாற்றங்களையும் தனிமனித ஞானத் தேடலையும் கொண்டு வருகின்றன என்றால் அது மிகையில்ல.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)

The post வணக்கம் நலந்தானே! ஊர் கூடி தேர் இழுப்போம்! appeared first on Dinakaran.

Read Entire Article