வடலூர்,
வள்ளலார் தெய்வநிலையை நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர்கள், குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஜோதி தரிசனத்தை காண திரளான பக்தர்கள் வடலூருக்கு வருவார்கள். மேலும் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று மாதபூச ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்தாண்டு தை மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக 2 பூசம் வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரக்கூடிய பூசம் மாத பூசமாகும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி வரக்கூடிய பூசமே தைப்பூசமாகும். முன்னதாக இந்த விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தைபூச ஜோதி தரிசனம் தொடங்குகிறது. 13-ந்தேதி வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நடைபெறும். எனவே தைப்பூச ஜோதி தரிசனம் தொடர்பாக சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.