டாக்கா:
வங்காளதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (வயது 79). இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளையின் பெயரில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து (10 ஆண்டுகள் சிறை) உத்தரவிட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. அத்துடன் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கலிதா ஜியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக இந்த மாத தொடக்கத்தில் லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.