வடலூர் சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இன்று ஜோதி தரிசனம்

3 months ago 8

வடலூர், பிப். 11: வடலூர் சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று ேஜாதி தரிசனம் நடக்கிறது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு 154வது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்திய ஞான சபையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் சந்நிதியில் மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த நற்கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மார்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதையடுத்து சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களையும், வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர். பின்னர் சன்மார்க்க அன்பர்கள் ஒன்று சேர்ந்து ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை- அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் பாடலை பாடியும், வள்ளலார் எழுதிய கொடி பாடல்களையும் பாடியபடி காலை 10 மணியளவில் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். ஜோதி தரிசனத்தை காணவரும் பக்தர்களுக்காக அறநிலைய துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் தற்காலிக நிழற்பந்தல்கள், அன்னதான உணவுப்பந்தல், நிழற்பந்தல்கள் குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. விழாவினை முன்னிட்டு 3 இடங்களில் பெண்களுக்கு 43 கழிவறையும், 22 குளியலறையும், ஆண்களுக்கு 44 கழிவறையும், 20 குளியலறையும், 40 இடங்களில் ஆண்கள், பெண்களுக்கான நடமாடும் கழிவறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தரமாக 28 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மின் விளக்குகள் ஜெனரேட்டர் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த முதன்மை அலுவலர்களிடம் தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி ஜோதி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தெய்வ நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் டிஐஜி திஷாமித்தல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, வடலூர் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள், 10 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜோதி தரிசனம் ‘யூடியூப்’ சேனலில் நேரலை
இன்று தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி நாளை அதிகாலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 13ம் தேதி 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும். மேலும் ஜோதி தரிசனத்தை 6 காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post வடலூர் சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இன்று ஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article