கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. கருப்பு திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரகளை நீக்கி காலை 6 மணி முதல் கால ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 154-வது தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, அவர் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு, முதல் கால தரிசனம் நடைபெற்றது. இதையடுத்து, 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வடலூரில் மது, மாமிச கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
The post வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் appeared first on Dinakaran.