*11ம் தேதி ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்
வடலூர் : வடலூரில் நாளை மறுதினம் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ம் தேதி ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தவர்.
வடலூர், கருங்குழி ஆகிய ஊர்களில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் சித்திபெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் பசிப்பிணியை தீர்க்க வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார். மேலும் இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை காண சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனத்தை, மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு 154வது ஆண்டு தைப்பூச விழா நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தர்ம சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெறுகிறது.
நாளைமறுதினம் (திங்கட்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூரில் தண்ணீரால் விளக்கு எரித்த நற்கருங்குழியிலும் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெறும்.
பின்னர் ஞான சபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெறும். 11ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மறுநாள் புதன்கிழமை காலை 5.30 மணி என 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பெருந்திரளாக வர உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
தைப்பூசவிழாவிற்கு ஒருநாள் இடைவெளிக்கு பின் பிப்ரவரி 13ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் திரு அறை தரிசனம் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, சி.வெ.கணேசன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இதேபோன்று பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், நடத்தும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் ஜோதி தரிசனம் காண வரும் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு ஒருவழி பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள், வள்ளலார் தெய்வ நிலைய பணியாளர்கள் மற்றும் வடலூர், பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
அடிப்படை வசதிகள் ஏற்பாடு தீவிரம்
கனரக வாகனங்களை விழாக் காலங்களில் மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரத்யேக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய வாகனங்கள் மூலம் தெய்வ நிலையத்திற்கு பக்தர்களை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
24 மணி நேர மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றவும், தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும், காவல்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் சத்திய ஞான சபையில் வர்ணம் பூசும் பணிகள், மின் விளக்குகள், பக்தர்கள் தங்குவதற்கான மேற்கூரை அமைத்தல், பெருவெளி வளாகம் முழுவதும் மரக்கிளைகள் அகற்றுதல், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தீவிரமாக அறநிலையத்துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பிலும் நடைபெற்று வருகிறது.
The post வடலூரில் நாளை மறுதினம் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது appeared first on Dinakaran.