பள்ளிபாளையம்: வட மாநில தொழிலாளர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் ஒடிசா தொழிலாளர்கள் 2 பேர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை குளத்துக்காட்டில் நேற்று காலை சாலையோரம் 2 ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துபலேஷ் (26), முன்னா (25) என்பது தெரிய வந்தது.
இருவரும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு ஏஜென்ட் மூலம் வேலைக்கு வந்துள்ளனர். ஆலை வளாகத்திற்குள், வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அறைகள் உள்ளன. இதில், 8 பேர் கொண்ட அறையில் இவர்களும் தங்கியிருந்தனர். குடி பழக்கம் கொண்ட இவர்களுக்கிடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, துபலேஷ் சரமாரி தாக்கியதில் முன்னா காயமடைந்தார். இந்த நிலையில்தான் இருவரும் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஆலையிலிருந்து வெளியே சென்றவர்கள் நேற்று காலை சாலையோரம் சடலமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அருகில், மது, தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் சிதறிக் கிடந்தன. அங்கு நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் 5 பேர் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில், ஒரு பெண்ணும் இருந்ததாக தெரியவந்துள்ளது. போதை அதிகமாகவே பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் போதை மயக்கத்தில் கிடந்த இருவரையும் மற்றவர்கள், தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வடமாநிலத்தவர்களுக்குள் திடீர் மோதல் தலையில் கல்லை போட்டு 2 தொழிலாளர்கள் கொலை: பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.