வடசேரி அசம்பு ரோட்டில் சாலை உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியது

2 months ago 12

நாகர்கோவில்: நாகர்கோவில் புத்தேரி மேம்பாலம் அருகே சாலையின் அடிப்பகுதியில் இருந்த போர்வெல் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதில் இரு சக்கர வாகனங்கள் விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர். சாலையில் கிடந்த இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சாலையின் அடிப்பகுதியில் உள்ள போர்வெல் உடைந்து தண்ணீர் பெருக்கெடுப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினர் கூறினர். மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பள்ளத்தில் ஜல்லி நிரப்பப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் கசிவு இருந்ததால் சாலையில் அரிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று காலை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் சாலை தோண்டப்பட்டு போர்வெல் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றது. மழை காலங்களில் போர்வெல் தண்ணீர் பெருக்கெடுத்தால் வெளியேற வசதியாக தனியாக குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழாயை ஏற்கனவே குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலையை தோண்டிய போது உடைத்து உள்ளனர். அதை சரி செய்யாமல் அப்படியே துணியை வைத்து மூடியவாறு சாலையை சமன் செய்து விட்டனர்.

இப்போது மழை காலம் என்பதால் நீரூற்று அதிகரித்து போர்வெல்லில் இருந்து தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் சாலையில் அரிப்பு ஏற்பட்டதாக மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி இந்த பிரச்னையை சரி செய்ததும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பகுதியில் சாலை தற்காலிகமாக சீரமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வடசேரி அசம்பு ரோட்டில் சாலை உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article