காசா முனை,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், காசா முனை பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் எல்லையருகே, வடபகுதியில் அமைந்த பெய்ட் லஹியா என்ற நகர் மீது இஸ்ரேல் இன்று கடுமையான தாக்குதலை தொடுத்தது. இதில், புலம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஒன்று சேதமடைந்தது. இதில் 20 பேர் காயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தாக்குதலில் 60 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அமைச்சகத்தின் மருத்துவ துறைக்கான இயக்குநரான டாக்டர் மர்வான் அல்-ஹம்ஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார். இவர்கள் தவிர, 17 பேரை காணவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 3 வாரங்களாக இந்த எல்லை பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.