வடகொரியாவுக்குள் நுழைந்ததா தென்கொரிய டிரோன்கள்? பியாங்யாங் நகரில் பாகங்கள் கண்டுபிடிப்பு

4 weeks ago 8

சியோல்:தென்கொரியாவின் ஆளில்லா விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் தங்கள் வான்எல்லையில் தென்கொரியா ஆளில்லா விமானங்களை பறக்க விட்டதாக வடகொரியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இதனை தென்கொரியா மறுத்தது.

ஆனால் மீண்டும் வடகொரிய வான்வௌியில் தென்கொரியாவின் ஆளில்லா விமானங்கள் பறந்தால் அது மோசமான பேரழிவுக்கு வழிவகுக்கும் என கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இரு கொரிய நாடுகளையும் இணைக்கும் முயற்சிகளை கைவிட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி தென்கொரியாவை முக்கிய எதிரி நாடு என வடகொரிய அறிவித்தது. அத்துடன் இரு நாடுகளையும் இணைக்கும் சாலைகள் மற்றும் ரயில் இணைப்பு பாதைகளை வடகொரிய ராணுவம் குண்டு வைத்து தகர்த்தது.

இந்நிலையில் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 13ம் தேதி பறந்த ஆளில்லா விமானங்களில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய ராணுவ அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “அண்மையில் தென்கொரியா நடத்திய ராணுவ அணிவகுப்பில் காணப்பட்ட அதே ஆளில்லா விமான பாகங்கள் பியாங்யாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வடகொரியாவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீச பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தென்கொரியா எந்த பதிலும் வௌியிடவில்லை.

The post வடகொரியாவுக்குள் நுழைந்ததா தென்கொரிய டிரோன்கள்? பியாங்யாங் நகரில் பாகங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article