கோவை: “ஈஷா யோகா மையத்தில் பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்” என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனின் குற்றச்சாட்டை, அந்த மையத்தின் அறக்கட்டளை மறுத்துள்ளதுடன், பெண்களின் அழகு குறித்த கருத்துக்கு கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்ட தகவல்: “‘பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு’ என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது. பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.