வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் 5 ஏரிகளில் தண்ணீர் திறப்பு: தயார் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள்; வெள்ள பாதிப்பை தடுக்க கூடுதலாக 4 மதகுகள்

3 months ago 12

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள 5 ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் உபரிநீரை வெளியேற்றுவதற்கு 4 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது.

சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். இதில் பொதுமக்களின் அவசியத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைநீர் வடிகால்களை சீரமைப்பது, வெள்ளம் வடியும் கால்வாய்களை தூர்வாரும் பணியை வேகப்படுத்துவது என பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் சில பகுதிகளில் முதல் தளம் வரை வெள்ள நீர் புகுந்தது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள 5 ஏரிகளிலிருந்து அதன் கொள்ளளவிலிருந்து பாதியளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதனால் ஏரிகளில் ஏற்படும் உடைப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றை சமாளிக்க தயார் நிலையில் நீர்வளத்துறை உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆவடி, அயப்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஆகிய 5 ஏரிகளில் இருந்து ஒரு வாரமாக விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் இந்த 5 ஏரிகளில் நீர்மட்டத்தைவிட கூடுதலாக 2 அடிக்கு மேல் தண்ணீர் வரத்து அதிகரித்தால் 1000 கனஅடி அளவிற்கு நீர் வெளியேறும்.

எனவே தண்ணீர் வெளியேறி வீணாவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் டிசம்பர் வரை ஏரிகளில் பாதியளவிற்கு தண்ணீர் நிரம்பியிருக்கும். கடந்தாண்டு வரை இந்த ஏரிகளில் 1 முதல் 2 மதகுகள் மட்டுமே இருந்ததால் வெள்ளம் ஏற்படும் போது முறையாக தண்ணீர் வெளியேற்ற முடியவில்லை. கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் ஏரிகள் உடைந்து அருகில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. எனவே இந்தாண்டு வெள்ளத்தை கையாளுவதற்காக அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றுவதற்காக கூடுதலாக 4 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதியளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளம் ஏற்படும் போது ஏரிகளை சுற்றியுள்ள இடங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் 5 ஏரிகளில் தண்ணீர் திறப்பு: தயார் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள்; வெள்ள பாதிப்பை தடுக்க கூடுதலாக 4 மதகுகள் appeared first on Dinakaran.

Read Entire Article