சென்னை: வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே தமிழகத்தில் உள்ள 799 நீர்நிலைகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பொழிகிறது. அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
நேற்று முன்தினம் நிலவரம் படி சென்னை 90 மி.மீ., திருவள்ளூரில் 100 மி.மீ., மற்ற இடங்களில் 70 முதல் 80 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரம் படி வடதமிழகத்தில் சராசரியாக 150 மி.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை இயல்பைவிட 84 சதவீதம் மழை பெய்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 799 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, 1,637 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.
பாதி அளவில் 1,892 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மிக குறைந்த அளவில் 8132 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
நேற்றைய நிலவரம்படி, அதிகபட்சமாக 2040 பாசன ஏரிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 310 பாசன ஏரிகள் முழு கொள்ளளவாக நீர் நிரம்பியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 1340 பாசன ஏரிகளில் 244 ஏரிகள் முழு கொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 ஏரிகளில் 28 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை, தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 13.23 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1223 மில்லியன் கன அடி நீரும் உள்ளது.
மேலும், ஏரிக்கு தொடர்ந்து 260 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் செங்குன்றம், சோழவரம் ஆகிய சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சென்னையின் மற்றொரு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 196 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 277 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2045 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 15.00 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
The post வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே 799 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.