வடகாடு கோவில் திருவிழாவில் சாதிய மோதல்: அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

14 hours ago 4

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழாவின்போது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலால் பதற்றமான சூழல் எழுந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டு, வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ் இனத்தின் குடிகளுக்குள் நடைபெற்று வரும் வன்முறைகளும், படுகொலைகளும் பெருங்கவலையைத் தருகின்றன. சாதியின் பெயரால் நடைபெறும் வன்முறைகள் யாவும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் முற்றாகக் கெடுத்து, தமிழ்த்தேசியத்தின் ஓர்மைக்குத் தீங்கு விளைவிக்கும் பேராபத்தாகும். அதற்கு என்னுடைய கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்.

தமிழரின் தொன்ம வாழ்வியல் நாகரீகங்களின் ஆய்வுகளை உலகத்தார் கண்டு வியந்து, தமிழினத்தின் தொன்மையையும், பெருமையையும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற தற்காலத்தில், தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது ஏற்கவே முடியாத வரலாற்றுப் பெருந்துயராகும். தமிழ்ச்சமூகங்களிடையே நிகழும் சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இனமக்களையே வெட்கித் தலைகுனியச் செய்துவிடுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்மநேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்ற ஒற்றுமையின்மை நிகழ்வுகளும், பிளவுகளும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே நம்மை இழுத்துச்செல்கின்றன என்பது மறுக்கவியலா பேருண்மையாகும்.

மூவேந்தர்களது ஆட்சிக்காலம் தொட்டு, தற்கால அரசியல் காலம்வரை சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பதே இந்த இனத்தின் துரோக வரலாறாகும். அதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது புரிந்துகொண்டு சாதி-மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு ஒன்றுபட்டு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்க முன்வர வேண்டும். சொந்த ரத்தங்களுக்குள் நாம் மோதிக்கொண்டு சிந்துகின்ற ரத்தம் இன எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் வலுசேர்ப்பதாய் அமைந்துவிடும். ஆகவே, சாதியத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு தமிழ்ச்சமூக ஒற்றுமையைக் குலைக்க முயல்வோர் எவராயினும் அவர்களுக்கு ஒருபோதும் துணைநிற்காமல் தமிழிளம் தலைமுறையினர் ஓரணியில் நின்று புறந்தள்ள வேண்டும்.

'சாதியை ஒழித்தோம்; சமூகநீதியைக் காத்தோம்' என்று தற்பெருமை பேசும் திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்று வரும் இத்தகைய சாதியக் கொடுமைகள் யாவும், திராவிடம் என்பதே போலியானது, பொய்யாகக் கட்டமைக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்துகிறது. கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கட்டுக்கடங்காத போதைப்பொருள் விற்பனை, சாதிய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வெட்கக்கேடானது. வடகாடு கலவரத்தில் 13 பேரை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்துவிட்டு, கலவரத்திற்கு சாதி காரணம் இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை கூறுவதை எப்படி ஏற்க முடியும்? சட்டம்-ஒழுங்கை முற்றாகச் சீரழித்ததுதான் திராவிட மாடல் தி.மு.க. அரசின் ஒற்றைச் சாதனையாகும்.

வடகாடு கலவரத்திற்குச் சாதிய மோதல் காரணமல்ல; மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம்தான் காரணம் என்று தமிழ்நாடு காவல்துறை புதிய விளக்கமளித்துள்ளது வெட்கக்கேடானதாகும். சாதிய கலவரம்தான் தி.மு.க. அரசிற்கு அவமானமா? மதுபோதை கலவரம் வெகுமானமா? இத்தனை வன்முறை வெறியாட்டங்களுக்கும் காரணமான மதுவை அரசு ஏன் தடை செய்யவில்லை? போதையின் பாதையில் இளைய தலைமுறை செல்லாதீர்கள் என்று கோரிக்கை வைக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுத் தாய்மார்கள் கண்ணீரோடு மதுக்கடைகளை மூடவேண்டும் என்று வைக்கும் கோரிக்கையை ஏற்க மறுத்துத் தொடர்ந்து மது விற்பனை செய்வது ஏன்? தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் மது குடிப்பது இயல்பானது என்று தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சரே சான்றிதழ் அளிப்பதுதான் போதையின் பேரழிவிலிருந்து இளைய தலைமுறையைக் காக்கும் முறையா?

ஆகவே, தமிழ்நாடு அரசு விழுப்புரம் மேல்பாதி போன்று கோவிலை இழுத்துப் பூட்டுவதைக் கைவிட்டு, புதுக்கோட்டை வடகாட்டில் இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி பதற்றத்தைத் தணித்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, மீண்டும் அமைதிச்சூழல் திரும்ப விரைந்து நடவடிக்கை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article