
திருவனந்தபுரம்,
கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து வருகிறார். இதன் மூலம் கேரளாவுக்கு அதிகப்படியான அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அபுதாபி லாட்டரி மூலம் கேரள தொழிலாளர்கள் பலர் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
திருவனந்தபுரம் சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அலியார் குஞ்சு (வயது 61). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உண்டு. இதில் 2 மகள்களுக்கு திருமணமானது. அலியார் குஞ்சு கடந்த 40 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது அபுதாபி பிக் லாட்டரி எடுப்பது வழக்கம்.
அதன்படி கடந்த 18-ந் தேதி ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட்டை எடுத்தார். அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூ.57 கோடி கிடைத்தது. இதை அறிந்த அலியார் குஞ்சும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து அலியார் குஞ்சு கூறுகையில், 'நான் 40 ஆண்டுகள் சவுதியில் பணியாற்றி விட்டேன். இனி சொந்த ஊரில் சொந்தமாக தொழில் செய்யலாம் என உள்ளேன்' என்றார்.