சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்தடுத்த போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது.
இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, மும்முனைப் போராட்டம் போல திமுக நடத்தியது. யுஜிசி வரைவு அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்து கடிதம் எழுதியதோடு நிற்காமல், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கடந்த, பிப்ரவரி 6ம் தேதி, தலைநகர் டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீனவர்களுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படுகின்ற துன்பங்களை களைவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும், நிரந்தர தீர்வு கிடைக்காத காரணத்தினால், இந்தியா கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் வெளிப்புறத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 3ம் கட்டமாக, திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்களும் நடைபெற்றது.
வரிப் பகிர்வில் கூட 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சார்பில் வழங்குகிறோம். அதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பி தருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்குகின்றனர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை? புயல் வெள்ளத்தில் தமிழ்நாடு பாதிப்பு அனைவருக்கும் தெரியும். சேர வேண்டிய நிதி, ஆசிரியர்கள் சம்பளம், 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி என எதையும் தர மறுக்கிறது.
எடப்பாடி பழனிசாமி நடிக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசுக்கு எதிராக பெயரளவில் ஒரு அறிக்கை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத், தேஜஸ் ரயில்களை விட்டதாக நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அதுவும் ரயில்களுக்கு பெயர் இந்தியில், ஆனால் கலைஞர் ஆட்சியின் போது, தமிழ்நாட்டிற்கு வந்த ரயில்கள் அனைத்தும் தமிழ் பெயர்களை தாங்கி ஓடின. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிர்மலா சீதாராமன் கோபப்படுகிறார்.
இதற்கு மேலும் ஒன்றிய அரசு திருந்தாவிட்டால் திமுக உரிய வகையில் பாடம் புகட்டும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த தேர்தல் அமைதியாகவும் நியாயமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் விவகாரம், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன் வைத்து எதிர்கட்சியினர் பேசினர். அண்ணாமலை சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டார்.
இருப்பினும், 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளோம். இது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கிற்கான எடுத்துக்காட்டு. ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு தான் அற்ப சிந்தன. எங்களிடம் இருந்து சுரண்டிக் கொண்டு செல்லும் நிலையில், நாங்கள் வாய் முடி சும்மா இருக்க வேண்டுமா? நாங்கள் செலுத்தும் வரியில், 50 சதவீதமாவது கொடுக்க வேண்டுமா? மக்கள் எங்களை கேள்வி கேட்க மாட்டார்களா. இவ்வாறு அவர் கூறினார்.
The post வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்தடுத்த போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.