விழுப்புரம், ஜன. 19: கோட்டக்குப்பம் செக் போஸ்டில் நடந்த வசூல் வேட்டை புகாரின் அடிப்படையில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டுள்ளார். தொடர் நடவடிக்கையால் மதுவிலக்கு போலீசார் கலக்கத்தில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடமாடும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் மது, சாராயம் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மது கடத்துபவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு விடுவிப்பதாகவும், மது பாட்டில்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி. சரவணன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ காந்திமோகன், ஏட்டு கலையரசன் ஆகியோர் ஓசூர் நோக்கி காரில் சென்றவர்களிடம் சோதனை நடத்தி பணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. சரவணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் பீர்பாட்டில் பறிமுதல் செய்து கொண்டும், அவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்த 3 மதுவிலக்கு ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
The post வசூல் வேட்டை புகாரில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.