
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது. இதையொட்டி காலை சுப்ரபாதத்தில் தாயார் எழுந்தருளினார். பின்னர் சஹஸ்ர நாம அர்ச்சனை நடந்தது.
இதைத்தொடர்ந்து, காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர், கூரை, பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தங்க தேரோட்டம்
வசந்தோற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 10-ம் தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. 12-ம் தேதி காலை 9.45 மணிக்கு தங்க தேரோட்டம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு 3 நாட்களும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சுக்கிரவார தோட்டத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தாயார் கோவிலின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வசந்தோற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ.150 செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.