
வாஷிங்டன்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், இந்த தாக்குதல் மிகவும் மோசமானது. இரு நாடுகளையும், அதன் தலைவர்களையும் எனக்கு நன்றாக தெரியும். இந்த போர் பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டுமென நான் நிலைக்கிறேன். இரு நாடுகளும் சண்டையை நிறுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். இப்போது இருநாடுகளும் சண்டையை நிறுத்தலாம். பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சண்டையை தடுக்க என்னால் ஏதேனும் செய்ய முடியுமென்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்' என்றார்.