* விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், இரு மகள்களுக்கு ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி
* விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்காக உதவித்தொகையாக ரூ.10 லட்சம்.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தனிநபர் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடியை வங்கிகள் மூலம் கட்டணமின்றி வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், இரு மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்காக உதவித்தொகையாக ரூ. 10 லட்சம் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ. 10 லட்சமும் வங்கிகள் மூலம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆயுள் காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்காக பெருந்தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் தனது வருவாயில் பெருமளவில் இதற்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு ஊழியர்களின் நலன் கருதி, இவர்களுக்கும், அரசு ஊழியர் குடும்பத்தினருக்கும் கட்டணமில்லா காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு செய்தது. அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் முன்னோடி வங்கிகளிடம் தமிழக அரசே பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பயனாக பல சலுகைகளை அரசு பணியாளர்களுக்கு வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.
இதன்படி, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன. மேலும் விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.
அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகையை கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். மேற்குறிப்பிட்ட இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக் கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் சாருஸ்ரீ, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post வங்கிகள் மூலம் கட்டணமின்றி வழங்க ஏற்பாடு; அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.