
டாக்கா,
வங்காளதேசத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சமீபத்தில் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று வன்முறையால் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி கடந்த 27-ந்தேதி, மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, வங்காளதேசத்தின் இடைக்கால அரசுக்கு, இந்துக்கள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.
இந்நிலையில், கோமில்லா மாவட்டத்தில் முராட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பாஞ்ச்கிட்டா கிராமத்தில் வசித்து வரும் இந்து மத இளம்பெண் (வயது 21) ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து, ஆன்லைனில் பரவ செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஷாகித் மியா என்பவரின் மகன் பஜர் அலி பஜர் (வயது 36) என்பவரை அந்த பகுதி மக்கள் பிடித்து, அடித்து தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த பஜர் அலி தப்பியோடி விட்டார். அந்த பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால், குழந்தைகளுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். இந்து மத நிகழ்ச்சி ஒன்றை காண்பதற்கான ஆவலுடன் இருந்துள்ளார். இந்நிலையில், வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்தவரான பஜர் அலி, கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீடு புகுந்து கத்தி முனையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அவருடன் இருந்தவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில், பஜர் அலி மற்றும் 4 பேரை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.