வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இந்தியாவுக்கு 95 ரன்கள் வெற்றி இலக்கு

3 months ago 27

கான்பூர்,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் (40 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (6 ரன்) களத்தில் இருந்தனர். 2-வது நாள் பலத்த மழையாலும், 3-வது நாள் ஈரப்பதமான மைதானத்தாலும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்றைய ஆட்டம் சூரியன் உதயத்தால் சரியான நேரத்தில் தொடங்கியது. நேற்று ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி தடுமாறியது. வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல மளமளவென சரிந்தது. 74.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாட தொடங்கியது. டெஸ்ட் போட்டியா அல்லது 20 ஓவர் போட்டியா என ரசிகர்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு மைதானத்தில் பந்துகள் நாலாபுறமும் பறந்தன. 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எளிய இலக்கு என்பதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்று கடைசி நாள் என்பதால், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து போட்டியை டிரா செய்ய வங்காளதேச அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article