வங்கதேசத்தை ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்தியா: 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தல்

3 hours ago 2

கான்பூர்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. கிரீன் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்த நிலையில் மழை காரணமாக அன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. மைதானம் ஈரமாக இருந்ததால் அடுத்த 2 நாள் ஆட்டமும் கைவிடப்பட்டதால், இந்த போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், 4வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை 233 ரன்னுக்கு சுருட்டிய இந்தியா வெற்றி முனைப்புடன் அதிரடியில் இறங்கியது. டெஸ்ட் போட்டிக்கான இலக்கணத்தை அடியோடு ஒதுக்கி வைத்துவிட்டு, டி20 போல அடித்து விளையாடிய இந்திய அணி 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (ரன் ரேட் 8.22). இந்த அதிரடியால், டெஸ்ட் வரலாற்றில் 50, 100, 150, 200, 250 ரன் என அனைத்து மைல்கல்லையும் விரைவில் எட்டிய அணியாகவும் சாதனை படைத்தது.

52 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய பவுலர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம்146 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (47 ஓவர்). ஷத்மன் இஸ்லாம் 50, முஷ்பிகுர் ரகிம் 37, கேப்டன் ஷான்டோ 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். காலித் அகமது 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட், ஆகாஷ் தீப் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 95 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் 8, கில் 6 ரன்னில் வெளியேற, ஜெய்ஸ்வால் 51 ரன் (45 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

இந்தியா 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கோஹ்லி 29 ரன், ரிஷப் பன்ட் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 2, தைஜுல் இஸ்லாம் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடரை 2-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்த இந்தியா, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது.

2 இன்னிங்சிலும் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் (72 & 51) ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆல் ரவுண்டராக அசத்திய ஆர்.அஷ்வின் (114 ரன் & 11 விக்கெட்) தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியாவுக்கு 12 புள்ளிகள் கிடைத்தன. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி குவாலியரில் அக்.6ம் தேதி நடக்க உள்ளது.

அஷ்வின் அமர்க்களம்!
* 150 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் அஷ்வின் முதல் இடத்தை இலங்கை வீரர் முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் (தலா 11 முறை). காலிஸ் (தென் ஆப்ரிக்கா) 9 முறை, ஹாட்லீ (நியூசி.), இம்ரான் (பாக்.), வார்ன் (ஆஸி.) தலா 8 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர். அனைவரும் பந்துவீச்சாளர்கள் அல்லது பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள்.
* கான்பூர் டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஜாகிர் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வின், 2வது இன்னிங்சில் 100 விக்கெட் அள்ளிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கும்ப்ளே 94 (35 டெஸ்ட்), பிஷன் சிங் பேடி 60 (23 டெஸ்ட்), ஜடேஜா 57 (31 டெஸ்ட்), இஷாந்த் 54 விக்கெட் (36 டெஸ்ட்) அடுத்த இடங்களில் உள்ளனர். உலக அளவில் அஷ்வின் 6வது இடத்தில் உள்ளார் (102 விக்கெட், 36டெஸ்ட்). ஆஸி.யின் வார்ன் 138 (53 டெஸ்ட்), நாதன் லயன் 119 (57 டெஸ்ட்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.
* இந்தியா சொந்த மண்ணில் 2013-2024 வரை தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா (1994-2000, 2004-2008) தலா 2 முறை 10 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (1976-1986), நியூசிலாந்து (2017-2020) அணிகள் தலா 8 முறை.
* அதிக டெஸ்டில் வென்ற அணிகள் பட்டியலில் ஆஸி. (414), இங்கிலாந்து (397), வெ.இ (183), இந்தியா (180), தெ.ஆப். (179) டாப் 5ல் உள்ளன.
* ஒரு டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சேர்த்து ரன்ரேட் அடிப்படையில் வேகமாக ரன் குவித்த அணியாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் ரன் ரேட் 7.36 ரன்னாகும். அடுத்த இடங்களில் தெ.ஆப். (6.80/ஜிம்பாப்வே/2005), இங்கிலாந்து (6.73/பாகிஸ்தான்/2022), இங்கிலாந்து (6.43/அயர்லாந்து/2023), இங்கிலாந்து (5.73/வங்கதேசம்/2005) உள்ளன.

The post வங்கதேசத்தை ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்தியா: 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article