வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் இல்லை: அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

4 weeks ago 4

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் இல்லை என்று அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த ஆக.5ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா தப்பிச்சென்றார். இதை ெதாடர்ந்து ஆக.8ம் தேதி நோபல் பரிசு பெற்ற 84 வயதான முகமது யூனுஸ் வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரானார். வங்கதேசத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான ஆவணம் தன்னிடம் இல்லை என்று நேற்று வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறும்போது,’ வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்கள் என்னிடம் இல்லை. ஆக.5 காலை 10:30 மணியளவில், ஹசீனாவின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. அவர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஒருமணிநேரத்திற்குள் மற்றொரு அழைப்பில் அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டில் எங்கும் அமைதியின்மை பற்றிய செய்திகள் வந்தன. எனது ராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் முகமது அடில் சவுத்திரியிடம் அதை கவனிக்கச் சொன்னேன். அவருக்கும் எந்தத் தகவலும் இல்லை. ஒரு கட்டத்தில், ஹசீனா எனக்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் வந்தபோது, ​​பிரதமர் ராஜினாமா செய்தாரா என்பதை அறிய முயற்சித்தேன்.

ஆனால் ராஜினாமா செய்ததாக தகவல்தான் வந்ததே தவிர முறைப்படி கடிதம் மூலம் எங்களுக்குத் தெரிவிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் ராஜினாமா கடிதத்தின் நகலை எடுக்க, அமைச்சரவைச் செயலர் வந்தார். அவரிடம் நானும் அவரது கடிதத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். இனிமேல் இதை விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். அதுதான் உண்மை. இன்னும், இந்த கேள்வி மீண்டும் எழக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, நான் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்டேன். இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், உருவாகும் சூழ்நிலையில், அரசியல் சாசன வெற்றிடத்தை நீக்கி, சுமூகமான நிர்வாக செயல்பாடுகளை எளிதாக்க இடைக்கால அரசு அமைக்கலாம் என்று கூறியது. அதன்அடிப்படையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது’ என்றார்.

* வங்கதேச அதிபர் உரையில் முரண்பாடு
வங்கதேச சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், ‘கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று அதிபர் கூறினால், இது ஒரு வகையான சுய முரண்பாடாகும். ஆகஸ்ட் 5ம் தேதி ஹசீனாவின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாகவும், அதனை ஏற்றுக்கொண்டதாகவும் உரையில் குறிப்பிட்டார். தற்போது கூறுவது முரண்பாடாக உள்ளது. இது அவரது சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகும்’ என்றார்.

The post வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் இல்லை: அதிபர் அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article