சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று (நவ.26) மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ஃபெங்கால் (FENGAL) எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் பெயர் சவுதி அரேபியா வழங்கியதாகும்.