சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
நேற்று மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்தது. அதன்படி, 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
The post வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.