சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், பருவமழை தீவிரம் அடையவில்லை. இந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் என சொல்லப்பட்டது.
ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆனது. 3 முறை தள்ளிப்போய், கடந்த 11-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இது மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 2-3 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.