திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல் - அமைச்சர் சேகர்பாபு

3 hours ago 2

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் சார்பில் கட்டப்படும் திருமண மண்டபம், வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் சார்பில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மண்டபம் அமைக்கும் இடம், கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற திருமண மண்டபங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நேர்த்தியாக அமைந்திடும் வகையிலும், பணிகளை விரைவுப்படுத்திடவும் ஆய்வினை மேற்கொண்டோம். சென்னை, கொளத்தூர் ராஜாஜி நகரில் கடந்த 27.5.2025 அன்று முதல்-அமைச்சர் கொளத்தூர், பழனி மற்றும் திருநெல்வேலியில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் துறையின் சார்பிலான ஆய்வுக் கூட்டங்களை மேற்கொள்கின்றபோது மூத்த குடிமக்களுக்காக கட்டுகின்ற உறைவிடங்களின் பணி முன்னேற்றத்தை தொடர்ந்து கேட்டறிந்து வருகின்றார். இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மூத்த குடிமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கொளத்தூரில் அமையவுள்ள மூத்த குடிமக்களின் உறைவிடத்தில் 100 மூத்த குடிமக்கள் தங்கும் வகையில் குளியலறை, கழிப்பறை வசதியுடன் அறைகள், உணவருந்தும் அறை, நூலகம், மருத்துவ மையம், சிறு பூங்கா, யோகா மற்றும் தியான அறை, நடைபாதைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த உறைவிடங்களை பராமரிக்க முன்னணி நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்திற்கு இதுவரை ரூ.5 கோடி நிதி வரப்பெற்றுள்ளது.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு இந்த ஆட்சியில் தொண்டு செய்வதற்கு கிடைத்த வாய்ப்பைப் போல் இதுவரையில் வேறு எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை. அதனை எங்கள் திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் முதல்-அமைச்சரின் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக நினைக்கின்றோம். தமிழ்க் கடவுள் முருகனுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருகின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்திருக்கின்றது. அந்த வகையில் பழனி திருக்கோவிலின் பெருந்திட்ட வரைவு பணிகளுக்கு முன்பாகவே குடமுழுக்கு நிறைவு செய்யப்பட்டு இன்றைக்கு திருப்பதி போல் மிக பிரம்மாண்டமாக பழனி திருக்கோவில் காட்சி அளித்து கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகின்ற 14.7.2025 குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. இந்திய ஒன்றியத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்ற வகையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு வருகின்ற 7-ம் தேதி நடைபெற இருக்கின்றது. அதில் லட்சோப லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழாவிற்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், திருக்கோவில் குடமுழுக்கை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி அகன்ற திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. முதல்-அமைச்சர் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் நடத்திய துறை ஆய்வுக் கூட்டத்தில் திருச்செந்தூர் திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு லட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குடமுழுக்கு விழா பணிகளுக்காக மூன்று ஐ.ஏஎ.ஸ். அதிகாரிகள் இன்றிலிருந்து கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே திருச்செந்தூர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து, இது இந்த ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம்.

திருக்கோவில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூர் திருக்கோவிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. முதல் 30 நாட்கள் மண்டல பூஜையோடு திருக்கோவில் திருவிழாவும் தொடங்குகின்றது. ஆகவே திருச்செந்தூர் திருக்கோவிலுக்கு இந்த 30 நாட்களில் பக்தர்கள் எப்போது வந்து தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்ளுகின்ற புண்ணியம் கிடைக்கும். இத்திருக்கோவிலில் ஜுலை 1-ம்தேதி முதல் யாகசாலை பூஜைகள் ஆறு நாட்கள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூர், திருக்கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மற்றும் கடந்த குடமுழுக்குகளின் பழக்க வழக்கத்தின்படி குடமுழுக்கிற்கு முன்தினம் பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படுவதோடு, மறுநாள் காலையில் குடமுழுக்கு நிறைவு பெற்ற பின், மருந்து சாத்தும் நிகழ்வு மாலை வரை நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

அன்னதானம் என்ற நிலையில் எப்படி வேண்டுமென்றாலும் உணவு வழங்கினால் அது பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்படுகின்றபோது இது போன்ற திருவிழா காலங்களில் பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்கும். ஆகவே முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம். அவர்கள் வழங்குகின்ற அன்னதானத்தை பரிசோதிப்பதற்கு அன்னதான பரிசோதனை குழு ஒன்றை அமைத்திருக்கின்றோம். எங்களின் நோக்கம் வழங்கப்படுகின்ற அன்னதானத்தால் அதனைப் பெற்று அருந்துகின்ற பக்தர்களுக்கு எந்த விதமான உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடாது, அது இயற்கையான நேர்த்தியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான்.

மக்களை நோக்கி விஜய்யின் பயணத்தை தொடங்க சொல்லுங்கள். அவர் பயணத்தையே செப்டம்பர் மாதத்திற்கு மேல்தான் தொடங்குவேன் என்று சொல்கிறார். நேற்று காத்திருந்த தொண்டர்களை கூட பார்க்க முடியாமல் இருந்த செய்தி ஊடகங்களில் வந்தது. ஆகவே அவர், முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கின்ற இயக்கத்தையும் பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். மக்களை பாதுகாக்க எங்களுடைய மக்களின் முதல்வர் இருக்கின்றார். நிச்சயமாக முதல்-அமைச்சரின் முன்னெடுப்பில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராமல் அதே நேரத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற, வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் நடவடிக்கையை மேற்கொள்வார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பது போல் எங்கள் முதல்-அமைச்சர் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு நிச்சயமாக முற்பட மாட்டார். ஆகவே விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அறையில் அமர்ந்து கொண்டு அறைகூவல் விடுவதை முதல்-அமைச்சர் எளிதாக தனது லெப்ட் ஹேண்டில் (Left Hand) கையாண்டு செல்வார்.

மடப்புரம் திருக்கோவில் காவலாளி அவுட் சோர்சில் பணி புரிபவர். அவரது இறப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் தானே முன்வந்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபோல் எந்த மாநிலத்தின் முதல்-அமைச்சரும் இப்படி தானாக முன்வந்து வருத்தம் தெரிவித்ததில்லை. அக்குடும்பத்திற்கு தேவையான நிவாரணத்தை வழங்கி இருக்கின்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்டப்பிரிவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசே சி.பி.ஐ. விசாரணை கோரி இருக்கின்றது. தவறு எங்கு நடந்தாலும் விசாரணை முடிவில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிப்பதற்கு சட்டத்தின் ஆட்சி நடத்துகின்ற எங்கள் முதல்-அமைச்சர் தவற மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article