சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு வலுவிழந்தது. இன்று காலை அது புயலாக வலுப்பெறும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26ம் தேதி) நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் அதே பகுதிகளில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவே நிலை கொண்டு, நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 370 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 550 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இதன் காரணமாக கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் நேற்று கனமழை முதல் மிக கனமழை பெய்தது. அதன் காரணமாக அந்தபகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்த்து. அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.
இந்நிலையில், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. ஆனால் நேற்றிரவு நகரும் வேகம் 3 கி.மீ. ஆக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை அது புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. புயல் உருவாவதில் தாமதம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நகர்வின் வேகம் குறைந்தது ஆகிய காரணங்களால், ஏற்கனவே கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* நாளை கன மழைக்கு வாய்ப்பு
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தள பதிவில், ‘புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 29ம் தேதி முதல் மழை தீவிரமடையும். காவிரி டெல்டா மற்றும் சென்னை கடலோர பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நவம்பர் 29ம் தேதி முதல் கனமழை பெய்யத் தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது appeared first on Dinakaran.