திருவாரூர், நவ. 28: திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்று காலை முதல் மாலை வரை அடைமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காலத்தின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மூலமும் முன்னேற்பாடு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: வங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் ெதாடங்கிய மழை இரவு பகலாக நேற்று மாலை வரை அடைமழையாக பெய்ததால், 2வது நாளாக நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலைகள் ‘வெறிச்’: இடைவிடாத மழை, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை போன்றவற்றால் திருவாரூரில் எப்போதும் வாகனப்போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, பனகல் சாலை, நேதாஜி சாலை, பழைய பேருந்து நிலைய சாலை, தஞ்சாவூர் சாலை போன்றவைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் திருவாரூர் நகராட்சி உட்பட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் மூலம் மோட்டார் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடந்தன. மக்கள் நடமாட்டம் குறைந்ததால், வியாபாரமின்றி இருந்த பெருநிறுவனங்களை தவிர சிறிய கடைகள் மற்றும் சாலையோர கடைகள் அனைத்தும் நேற்று மாலை 4 மணியளவிலேயே பூட்டிச் சென்றனர். அடியோடு சாலையில் விழுந்த மரம் அகற்றம்: மேலும், நன்னிலம், நல்லமாங்குடி பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சாலையோரத்தில் இருந்து வந்த மரமல்லி மரம் ஒன்று நேற்று காலை அடியோடு சாய்ந்த நிலையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன், செயல் அலுவலர் உஷா ஆகியோர் சென்று அலுவலர்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் மரகிளைகளை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்தனர்.
81 செ.மீ., மழை பதிவு:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 6 மணி வரையில் மொத்தம் 81 செ.மீ அளவில் மழை பெய்த நிலையில் அதன்பின்னர் மாலை 4 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு, திருவாரூர் 40, நன்னிலம் 31.4, குடவாசல் 25.6, வலங்கைமான் 18.4, மன்னார்குடி 20, நீடாமங்கலம் 28.2, பாண்டவையாறுதலைப்பு 26.4, திருத்துறைப்பூண்டி 52.2, முத்துப்பேட்டை 34 என மொத்தம் 276.2 மி.மீ மழையும், சராசரியாக 30.7 மி.மீ மழையும் பெய்துள்ள நிலையில் இதில் அதிகளவாக திருத்துறைப்பூண்டியில் 52.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.
The post திருவாரூர் மாவட்டத்தில் பெய்த 81 செ.மீ., தொடர் மழையால் மக்கள் வீடுகளில் முடக்கம் appeared first on Dinakaran.