சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது இன்று அல்லது நாளை தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஆந்திரா, ஒடிசா வரையிலும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வெப்பநிலை குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் காணப்பட்டது. பிற பகுதிகளில் இயல்பை ஒட்டி காணப்பட்டது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. கரூர், வேலூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, மதுரை, சேலம், திருத்தணி, திருச்சி 100 டிகிரி, திருப்பத்தூர், தர்மபுரி 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இது இன்று அல்லது நாளை தென் தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவும் வாய்ப்புள்ளது. அத்துடன் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 10ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. காற்றழுத்தத்தை பொருத்தவரையில் அந்தமான் கடல் பகுதியில் நீடித்துக் கொண்டு இருக்கும் காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. வட இலங்கை மற்றும் தமிழக கடற்கரைக்கு நெருக்கமாக வந்து பிறகு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 8, 9, 10, 11ம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும். ஆந்திராவில் கனமழை பெய்யும். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக 200 மிமீ வரை பெய்துள்ளது. குறைந்த பட்சமாக 100 மிமீ வரை நேற்று வரை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 மிமீ வரை பெய்துள்ளது. ஆலந்தூர், மாதவரம் பகுதிகளிலும் தூரல் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் நேற்று திற்பரப்பில் 70 மிமீ மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி 42 மிமீ, பேச்சிப்பாறை 43 மிமீ, என மழை பெய்துள்ளது.
தக்கலையில் 20மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் சில பகுதிகளில், குறிப்பாக கரூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 11 மிமீ மழை பெய்துள்ளது. தென்காசி, கோத்தகிரி, தேனி மாவட்ட பகுதியிலும் மழை பெய்துள்ளது. திருச்சியில் தூறல் மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 35மிமீ, திருப்பூர் 45மிமீ, விருதுநகர் 46 மிமீ, சிவகாசி 16 மிமீ மழை பெய்துள்ளது. மதுரை, திண்டுக்கல், நாமக்கல், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
இலங்கை பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் கடல் பகுதியை நோக்கி இடி மழை மேகம் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நேற்று மாலையில் டெல்டாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மதியத்துக்கு மேல் தென் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் மழை பெய்து. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூரில் இரவில் அல்லது நள்ளிரவில் மழை ெதாடங்கியது. இன்று அதிகாலையில் டெல்டாவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் 8ம் தேதி காற்றழுத்தம் உருவாகி தமிழகத்திற்கு நெருங்கி வந்து தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். டெல்டா கடலூர் புதுச்சேரி, சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். இரு காற்று இணைவு ஏற்பட்டு ஆந்திராவில் கனமழையாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தம் உருவாகிறது: கடலோர மாவட்டங்களில் 12ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.