சென்னை: ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக முதல்வர் முன்னெடுக்கும் போராட்டங்கள் வெல்லும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு வாழும் நம் நாட்டில் வெறுப்புகளை பரப்பி நாள்தோறும் மக்கள் விரோத செயல்களை அரங்கேற்றிவரும் ஒன்றிய பாஜ அரசு, அதன் நீட்சியாக தற்போது சிறுபான்மை மக்கள் மீது போர் தொடுக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது.
தேசிய அளவில் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பாஜவின் சிறுபான்மையினர் விரோத செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. காஷ்மீருக்கான 370வது பிரிவு ரத்து. குடியுரிமை சட்டத்திருத்தம், பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டத்திருத்தம் என ஒன்றிய பாஜ அரசின் சட்டங்களும், திட்டங்களும் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன.
இந்த வக்பு திருத்தச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இஸ்லாமியர்களின் நலன்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், உரிமைகளைப் காப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னோடியாக இருக்கிறது என்பதை உரக்கச் சொல்வதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு.
அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதற்கான போராட்டத்தை திமுக தலைவர் அறிவித்திருக்கிறார். சட்டமன்றம் நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தின் பாதகங்களை எடுத்துச் செல்வோம். இஸ்லாமியர்களுக்காக முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு போராடும். வெல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதல்வர் முன்னெடுக்கும் போராட்டங்கள் வெல்லும்: அமைச்சர் நாசர் உறுதி appeared first on Dinakaran.