
நெல்லை,
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினமும் நேற்றும் நடைபெற்றது. வக்பு சட்டத் திருத்தத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. வக்பு புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் கூடாது. ஏற்கெனவே வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துகளின் நிலம் வகைப்படுத்துதலும் கூடாது. உறுப்பினர் நியமனம் அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், வக்பு வாரியம் 7 நாட்களில் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்துகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி இன்று (ஏப்.18) காலையிலிருந்து மேலப்பாளையத்தில் 1,500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோ, கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை என்பதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன.

இன்று மாலையில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாத் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகிறார்கள்.
மேலப்பாளையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகைக்குப் பின்னர் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.