சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ கூட்டம் இன்று (அக் 14ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் வக்பு சொத்துக்களுக்கு என்ஒசி வழங்கும் நடைமுறையை இல்லாமல் ஆக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தகவல்கள் உண்மை எனில், அந்த நடவடிக்கையால் வக்பு சொத்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் சூழல் உருவாகிவிடும்.
வக்பு சொத்துக்களின் மீதான ஆக்கிரமிப்புகள் வெளிப்படையாகவே நடந்தேறும் ஆபத்தும் உருவாகிவிடும். இதனால் வக்பு சொத்துக்களே இல்லாமல் போய்விடும் மிக மோசமான நிலை உருவாகிவிடும். திமுக அரசு, ஒருபோதும் இதனை செய்ய அனுமதிக்கக் கூடாது. வக்பு சொத்துகளுக்கு என்ஓசி-ஐ இல்லாமல் ஆக்குவது என்பது ஒன்றிய அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை, அப்படியே வழிமொழிவது போல் ஆகிவிடும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான கூட்டத்தில் என்ஓசி நடைமுறை தொடரவும், வக்பு சொத்துக்களை பாதுகாக்கிற வலுவான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் என்ஓசி நடைமுறையையே இல்லாமல் ஆக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால், எஸ்டிபிஐ கட்சி அதனை வலுவாக எதிர்ப்பதோடு, வக்பு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வக்பு வாரிய கூட்டத்தில் என்ஓசி வழங்கும் நடைமுறையை இல்லாமல் ஆக்க முயற்சி? எஸ்டிபிஐ கட்சி கண்டனம் appeared first on Dinakaran.