
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுக, முஸ்லிம் லீக், தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வக்பு போர்டுகளில் புதிய நியமனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. அதாவது, திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் மே 5 ஆம் தேதி வரை நடைபெறக் கூடாது என உத்தரவிட்ட கோர்ட்டு, இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு முன்பாக வந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது, நேரமின்மை காரணமாக வக்பு தொடர்புடைய வழக்குகளை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திப்பதாகவும் அதுவரை புதிய நியமனங்கள் மேற்கொள்ளவும் தடை விதிப்பதாகவும் நீதிபதி கூறினார்.