வக்பு திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் முதல்வரோடு துணை நிற்போம்: அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு

1 month ago 9

சென்னை: இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டித்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்கள் பேசியதாவது:

* தி.வேல்முருகன் (தவாக): ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவில் வாழ்கின்ற 32 கோடி இஸ்லாமிய மக்களின் வாழ்வுரிமையை இன்றைக்கு பறித்திருக்கிறது. இந்த தேசத்திற்கு ஒரு மாபெரும் இழுக்கை மோடி என்கிற பாரதிய ஜனதா அரசு தேடி தந்திருக்கிறது. இந்த மோசமான சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் எடுத்திருக்கிற இந்த நிலைப்பாட்டிற்கு பேராதரவை அளித்து, முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

* ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): நோக்கம் மசோதா அல்ல; மக்களை பிரிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதை தமிழ்நாடு என்றைக்கும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தொடர்ந்து முதல்வர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார், அது சம்பந்தமாக பல அறிவிப்புகளை சட்டமன்றத்தில் தெரிவித்துக்கொண்டும் இருக்கிறார். முதல்வரின் இப்படிப்பட்ட அறிவிப்புகளுக்கு, நடைமுறைகளுக்கு நாங்கள் துணையாக இருப்போம்.

* ப.அப்துல் சமது (மமக): பாசிச அரசினுடைய போக்கு எங்கே போகப்போகிறது, நாம் எப்படி போராட்டக் களத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கிறோம் என்பதை முன் உணர்ந்து தொலைநோக்கு பார்வையோடு முதல்வர் சொல்லி இருக்கக்கூடிய குரல். இந்தச் சட்டம் என்பது கல்வியைப் போன்று பொதுப் பட்டியலில் இருக்கக்கூடியது தான். எனவே, இந்த தீர்மானத்தை வழிமொழிகிறேன்.

* சதன் திருமலைக்குமார் (மதிமுக): வக்பை அழிப்பதன் மூலம், அந்த இனத்தை அழித்து விடலாம், அந்த மதத்தை அழித்து விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு ஒன்றியத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி நினைத்துக்கொண்டிருக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. ஆகவே, முதல்வரின் இந்த உறுதியை, அறிவிப்பை, மதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

* கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): இந்தியாவினுடைய அழகிய முகத்தை இன்றைக்கு ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தின் மூலமாக சிதைத்திருக்கிறது. இதைத்தான் தமிழ்நாடு அதை உள்வாங்கி, இப்படி சிதைக்கிற, இந்த கோர முகத்தைக் கொண்டிருக்கிற ஒன்றிய அரசை இன்றைக்கு நாம் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்காக, அந்த ஆட்சி அதிகாரத்தை ஆதரவு தெரிவிக்கிற யாராக இருந்தாலும் அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து தடுக்கிற ஒரு மிகப் பெரிய தீர்மானமாகத்தான் இந்த கண்டனத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

* வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தற்காலிகமாக பாஜ அரசு வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், இறுதி வெற்றி இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகளுக்குத்தான். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்கிற முதல்வரின் உணர்வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபடுகிறது. உங்களுக்கு துணை நிற்கும்.

* ம.சிந்தனை செல்வன்(விசிக): ஒரு நிரந்தர தீர்வை நோக்கி இந்தியாவிற்கு ஒரு திசைவழி வெளிச்சத்தைத் தரக்கூடிய இடத்தில் முதல்வர் இருக்கிறார். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி முதல்வர் கொண்டு வந்திருக்கிற இந்த தீர்மானம் இஸ்லாமியர்களுக்கானது மாத்திரமல்ல, இந்தியாவை நேசிக்கிற ஒட்டுமொத்த இந்தியாவின் குரல்.

* ஜி.கே.மணி (பாமக): ஒருமனதாக தீர்மானம் வருகின்ற வரையில் இதை நிறைவேற்றக்கூடாது, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினால்கூட நல்லது என்று தெரிவித்ததன் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல்வர் முன்மொழிந்திருக்கிற அடிப்படையில், நடுவண் அரசு கொண்டுவந்திருக்கிற இந்த சட்டம் இஸ்லாமிய பெருமக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில், அதை திரும்பப் பெற வேண்டும், ரத்து செய்ய வேண்டும்.

* அசன் மவுலானா (காங்கிரஸ்): முதல்வர் இஸ்லாமியர்களை பாதுகாக்க வேண்டும். . இந்தநேரத்தில் இந்தச் சட்டமன்றத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டம் கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசு கொண்டுவந்த வக்பு மசோதாவை எதிர்க்கிறது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் பேரியக்கம் ஒருமனதாக ஆதரிக்கிறது.

* எஸ்.பி.வேலுமணி (அதிமுக): முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வரும்போதே அதிமுக சார்பாக ஆதரவு அளித்தோம். வக்பு சட்ட திருத்த மசோதா முழுமையாக திருத்தப்பட வேண்டும். பெரும்பாலான இஸ்லாமிய முன்னோர்கள் தானமாகக் கொடுத்த சொத்துகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு இருக்கிறது. இதுசம்பந்தமாக அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவாக இருக்கும்.

* பாஜ எதிர்ப்பு
நயினார் நாகேந்திரன் (பாஜ): வக்பு வாரியத்தினுடைய நிர்வாகத்தை பற்றிய தீர்மானம் என்ப பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிலே பாராளுமன்ற கூட்டுக் குழுவில் ஏற்கனவே 14 அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைத்தவிர, இது முழுக்க, முழுக்க நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமே தவிர, இதை மத ரீதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முதல்வர் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

The post வக்பு திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் முதல்வரோடு துணை நிற்போம்: அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article