
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, த.வெ.க. இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, "வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. தாக்கல் செய்த மனுவை, பிற மனுக்களுடன் சேர்த்து விசாரித்ததற்காகவும், வக்பு சொத்துகளைப் பாதுகாக்கவும், வக்பு வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதை தடுக்கவும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்காகவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த தீங்கிழைக்கும் திருத்த சட்டம், முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, அவர்களின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய மத நடைமுறைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதற்காக மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. எங்களால் சுட்டிக்காட்டப்பட்ட இந்த சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு செய்து குறைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சியையும் மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.