இம்பால்: வக்பு திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாகக் கூறி, மணிப்பூர் பாஜ சிறுபான்மை பிரிவின் தலைவர் அஸ்கர் அலியின் வீட்டை ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர் பாஜ சிறுபான்மை பிரிவின் தலைவர் அஸ்கர் அலி. வக்பு சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இவர் கருத்துகளை பதிவிட்டுள்ளார். தவுபால் மாவட்டம்,லிலாங் என்ற இடத்தில் அஸ்கர் அலியின் வீடு உள்ளது.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மணிப்பூரில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தவுபால் மாவட்டத்தில் பேரணி நடந்தது. இதில்7000 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் திடீரென அஸ்கர் அலியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
பின்னர் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் ஏற்னவே தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்து அஸ்கர் அலி சமூகவலை தளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் முகாம் அழிப்பு
மணிப்பூர் மாநிலம் தவுபால் மாவட்டம் ஹெய்ராக் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த இடத்தில் பிடள்யூஜி என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளின் முகாம் செயல்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பல பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
The post வக்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவு; மணிப்பூர் பாஜ பிரமுகர் வீடு தீக்கிரை appeared first on Dinakaran.