வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக 10 வழக்குகள்.. 16-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

1 week ago 4

புதுடெல்லி:

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த சட்டத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் கடந்த 5-ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததார். அதன்பின் நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிடப்பட்டு வக்பு திருத்தச் சட்டம்-2025 அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என 10 பேர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் மத்திய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு விளக்கத்தையும் வாதங்களையும் கேட்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article